பர்கூர் அருகே ஏரியில் மர்மமாக இறந்து கிடந்த வாலிபர் கொலையா? போலீசார் விசாரணை
பர்கூர் அருகே ஏரிக்கரையில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
பர்கூர்:
பர்கூர் அருகே ஏரிக்கரையில் மர்மமான முறையில் வாலிபர் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏரியில் வாலிபர் பிணம்
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே உள்ள தீர்த்தகிரிப்பட்டி ஏரியில் நேற்று வாலிபர் ஒருவா் பிணமாக கிடந்தார். இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து அவர் பர்கூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு, இன்ஸ்பெக்டர் சவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி பகுதியை சேர்ந்த ராஜசேகர், (வயது25) என்பதும், இவர் பட்லப்பள்ளியில் உள்ள அக்காள் வீட்டில் தங்கி பெயிண்டிங் வேலைக்கு சென்று வந்ததும் தெரிந்தது. இவரது அக்காள் குடும்பத்தினர் பெங்களூருவில் தங்கியுள்ள நிலையில் வீட்டில் ராஜசேகர் மட்டும் தனியாக இருந்தது தெரிந்தது.
கொலையா?
இதையடுத்து கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய்கள, வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது அவர் இறந்து கிடந்த இடத்தின் அருகே மதுபாட்டில்கள் மற்றும் சிகரெட் துண்டுகள் கிடந்தன. இதையடுத்து போலீசார் ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாலிபர் ராஜசேகர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஏரியில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.