மருந்து விற்பனை பிரதிநிதியை கொலை செய்த நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக மருந்து விற்பனை பிரதிநிதியை கொலை செய்த நண்பருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
விழுப்புரம்,
விழுப்புரம் அருகே உள்ள நன்னாடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீராசாமி மகன் தனசீலன் (வயது 35), மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் மகன் அஜித் என்கிற கோதண்டபாணி (26). கூலி தொழிலாளி. இவரும் தனசீலனும் நண்பர்கள் ஆவர். மது அருந்தும் பழக்கம் உடைய இவர்கள் இருவரும் நன்னாடு பள்ளிக்கூடம் அருகே அவ்வப்போது மது அருந்துவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த 19.12.2020 அன்று தனசீலன், அஜித் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் அதே பகுதியில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது தனசீலனிடம் மது தருமாறு அஜித் கேட்டுள்ளார். அதற்கு அவர் தர மறுத்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் அஜித்தை தனசீலன் தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த அஜித் தனசீலனை அன்றைய தினமே கொலை செய்ய வேண்டும் என்று திட்டம்போட்டார்.
அதன்படி அன்று இரவு 11 மணியளவில் அஜித், தனசீலன் வீட்டிற்கு வந்தார். அவரது வீட்டின் முன்பக்க, பின்பக்க கதவுகள் தாழிடப்பட்டிருந்த நிலையில் அஜித், பக்கவாட்டில் இருந்த படிக்கட்டு வழியாக அத்துமீறி மாடிக்கு ஏறிச்சென்று வீட்டின் பின்புறம் சமையல் அறை மேலிருந்த ஓடுகளை பிரித்து உள்ளே புகுந்தார். பின்னர் அங்கு மதுபோதையில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த தனசீலனை அஜித் சவுக்கு கட்டையால் சரமாரியாக தாக்கினார். இதில் மயங்கி விழுந்த தனசீலனின் முகத்தில் அஜித், தலையணையை வைத்து அழுத்திக்கொலை செய்தார்.
இரட்டை ஆயுள் தண்டனை
இந்த சம்பவம் குறித்து தனசீலனின் மனைவி எழிலரசி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜித்தை கைது செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அஜித் என்கிற கோதண்டபாணிக்கு தனசீலனை கொலை செய்த குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், அத்துமீறி வீடு புகுந்து தாக்கிய குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனையும், ரூ.ஆயிரம் அபராதமும், இந்த அபராத தொகையை கட்டத்தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினார். ஏக காலம் என்பதால் அஜித், ஒரு ஆயுள் தண்டனையான 14 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இதையடுத்து அஜித், கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.