அன்னவாசல் அருகே கார் மோதி விவசாயி பலி; தம்பதி படுகாயம் பெண் பார்க்க சென்று விட்டு வெயிலுக்கு ஓய்வெடுத்த போது நேர்ந்த சோகம்
அன்னவாசல் அருகே பெண் பார்க்க சென்று விட்டு வெயிலுக்கு ஓய்வெடுத்த போது கார் மோதி விவசாயி பலியானார். தம்பதி படுகாயமடைந்தனர்.
அன்னவாசல்:
பெண் பார்ப்பதற்காக...
புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அருகே கோத்திராப்பட்டி சரளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பொய்யான் (வயது 50). இவரது மனைவி செல்லம் (45). அதே பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (56). விவசாயி. இவர்கள் 3 பேரும் பொய்யான் மகனுக்கு பெண் பார்ப்பதற்காக இன்று காலை இலுப்பூரில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டை சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இவர்கள் 3 பேரும் அன்னவாசல் அருகே செங்கப்பட்டி-சத்திரம் சாலையில் அனுமான் கோவில் அருகே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் சாலையோர மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சற்றுநேரம் ஓய்வு எடுத்துள்ளனர்.
விவசாயி பலி
அப்போது விராலிமலையில் இருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தடியில் அமர்ந்திருந்த 3 பேர் மீது மோதி விட்டு அருகில் இருந்த காட்டிற்குள் இறங்கியது. இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். இதில் தியாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த பொய்யான், அவரது மனைவி செல்லம் ஆகிய இருவரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அன்னவாசல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சோகம்
இதுகுறித்து தகவல் அறிந்த அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் தியாகராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய கார் டிரைவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் பார்க்க சென்று விட்டு வெயிலுக்கு ஓய்வெடுத்த போது விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.