பெங்களூருவில் பழங்கள், மோர், இளநீர் விற்பனை படுஜோர்
பெங்களூரு நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழச்சாறு, பழங்கள், மோர், தயிர், கேழ்வரகு, கம்பங்கூழ், இளநீர் போன்றவற்றின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது
பெங்களூரு: பெங்களூரு நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் பழச்சாறு, பழங்கள், மோர், தயிர், கேழ்வரகு, கம்பங்கூழ், இளநீர் போன்றவற்றின் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
பூங்கா நகரம்
20 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரு நகரம் குளுகுளு நகரமாக இருந்தது. இதனால், வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரு நகருக்கு வந்து குறைந்தது ஒரு மாதமாவது தங்கி விட்டு செல்வார்கள். ஆனால், தற்போது இந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. பூங்காக்கள் நிறைந்திருந்த பெங்களூரு நகரம் பூங்கா நகரம் என்று பெருமையுடன் அழைக்கப்பட்டது.
ஆனால், சாலை விரிவாக்கம், வளர்ச்சிப் பணிகள் என்ற பெயரில் 20 ஆண்டுகளில் லட்சக்கணக்கான மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
இதனால், குளுகுளு நகரமாக இருந்த பெங்களூரு நகரம் இன்று உஷ்ண பூமியாக மாறிவிட்டது. அத்துடன் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வாகனங்களில் இருந்து வெளியேறும் நச்சுப்புகை காற்றுடன் கலப்பதால் மாசு அதிகரித்து உஷ்ணம் அதிகரித்துள்ளது.
வெயிலின் தாக்கம் அதிகரிப்பு
கோடை காலம் தொடங்கினால், மக்கள் வெயிலின் தாக்கத்திற்கு ஆளாக வேண்டிய அவல நிலை உருவாகி உள்ளது. தற்போது பெங்களூருவில் மார்ச் மாத தொடக்கத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஏப்ரல் மாதம் என்றால் வெயிலின் தாக்கம் என்பதை சொல்லி தெரிந்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அந்த அளவுக்கு பெங்களூரு நகரில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால் பெங்களூரு நகரில் சாலைகள், மக்கள் அதிகம் கூடும் மார்க்கெட், பஸ், ரெயில் நிலையங்களில் மோர், பழச்சாறு, கம்பு, கேழ்வரகு கூழ் ஆகியற்றின் கடைகள் அதிகரித்துள்ளன. பொதுவாக பெங்களூரு நகரில் இளநீர் விற்பனை என்பது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது கோடை காலம் என்பதால், இளநீர் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. இது தவிர மாநில தோட்டக்கலை துறை சார்பில் ஹாப்காம்ஸ்கள் இயங்குகின்றன. இவற்றில் பழங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமக்கள் ஹாப்காம்ஸ்களில் தங்களுக்கு வேண்டிய பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இளநீர் விற்பனை
பெங்களூரு நகரில் ஒரு இளநீர் ரூ.20 முதல் ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பாக்கெட் மசாலா மோர் ரூ.8-க்கும், லசி ஒரு டம்ளர் ரூ.20-க்கும், ஆரஞ்சு மற்றும் சாத்துக்குடி பழச்சாறு ஒரு டம்ளர் ரூ.25 முதல் ரூ.35 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு டம்ளர் எலுமிச்சை பழச்சாறு ரூ.15-க்கும், திராட்சை ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கும், கருப்பு திராட்சை ஒரு கிலோ ரூ.200-க்கும், முலாம் பழம் ஒரு கிலோ ரூ.50-க்கும், வாழைப்பழம் ரூ, 50-க்கும், சப்போட்டா ரூ.60-க்கும், மாதுளை ரூ.80 முதல் ரூ.100-க்கும், அன்னாச்சி பழம் ஒன்று ரூ.50-க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ ரூ.40-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
பழ வகைகள்
சாத்துக்குடி ஒரு கிலோ ரூ.80-க்கும், மகலா(ஆரஞ்சு) ரூ.70-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆப்பிள், தர்ப்பூசணி, அன்னாச்சி, திராட்சை, வாழைப்பழத்துடன் சேர்த்து ஒரு பிளேட் (சிறிய பேப்பர் தட்டில்) ரூ.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஐஸ் கிரீம் கடைகளில் நள்ளிரவு வரை மக்களை காண முடிகிறது. அதேபோல் குளிர் பானங்களின் விற்பனையும் அதிகரித்துள்ளது.