மாமியார்-மருமகள் மீது தாக்குதல்
தேனியில் சாக்கடை கால்வாய் பிரச்சினையில் மாமியார், மருமகளை தாக்கிய தம்பதி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி:
தேனி சிவாஜி நகரை சேர்ந்தவர் வேங்கையன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் இடையே சாக்கடை கழிவுநீர் செல்வது தொடர்பான பிரச்சினை இருந்து வந்தது. இந்நிலையில், வேங்கையனின் மனைவி உமா, அதே பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது மூர்த்தியின் மகன் பாலா மோட்டார் சைக்கிளில் வந்தபடியே உமாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதை அவர் தனது மாமியார் அன்னத்தாயிடம் கூறினார். அதை அன்னத்தாய் தட்டிக் கேட்டபோது, அவரை மூர்த்தி, அவருடைய மனைவி மாலா, மகன் பாலா ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி போலீஸ் நிலையத்தில் அன்னத்தாய் புகார் செய்தார். அதன்பேரில், மூர்த்தி, பாலா, மாலா ஆகிய 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.