காதல் ஜோடி மீது தாக்குதல்; இந்து அமைப்பினர் 3 பேர் கைது

உப்பினங்கடி அருகே ஆட்டோவை வழிமறித்து காதல் ஜோடியை தாக்கிய இந்து அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

Update: 2022-04-06 16:22 GMT
மங்களூரு: உப்பினங்கடி அருகே ஆட்டோவை வழிமறித்து காதல் ஜோடியை தாக்கிய இந்து அமைப்பினர் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
காதல் ஜோடி மீது தாக்குதல்

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். நசீர், பூஜா என்ற பெண்ணை காதலித்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் நசீர், காதலி பூஜாவை ஆட்டோவில் வெளியே அழைத்து சென்றுள்ளார். 

உப்பினங்கடி அருகே ஸ்ரீபாகலு பகுதியில் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆட்டோவை வழிமறித்துள்ளனர். இதனால் நசீர் ஆட்டோவை நிறுத்தியுள்ளார். இதையடுத்து மோட்டார் சைக்கிள்களில் இருந்து கீழே இறங்கிய கும்பல், ஆட்டோவில் இருந்த நசீர், பூஜாவிடம் பெயர், எந்த மதம் உள்ளிட்ட விவரங்களை கேட்டுள்ளனர். அதன்படி அவர்கள் 2 பேரும் பெயர், மதம் பற்றி தெரிவித்துள்ளனர். அதில் காதல் ஜோடி வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள், காதல் ஜோடி மீது சரமாரியாக தாக்கியுள்ளனர். அப்போது அவர்கள் லவ் ஜிகாத்தில் ஈடுபடுவதை கண்டித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து சென்றுவிட்டது.
 
3 பேர் கைது

இந்த தாக்குதலில் காயம் அடைந்த நசீர், உப்பினங்கடி போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் காதல் ஜோடியான நசீர்-பூஜாவை தாக்கியது இந்து அமைப்பை சேர்ந்த சுரேந்திரா, தீர்த்த பிரசாத் உள்ளிட்டோர் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் சுரேந்திரா, தீர்த்த பிரசாத் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தலைமறைவாக உள்ளவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்