மலைவாழ் மக்கள் குடியிருப்புக்கு மின்சார வசதி

டாப்சிலிப்பில் உள்ள எருமபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுப்பது குறித்து வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2022-04-06 15:47 GMT
பொள்ளாச்சி

டாப்சிலிப்பில் உள்ள எருமபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் மின்சார வசதி ஏற்படுத்தி கொடுப்பது குறித்து வனத்துறை, மின்வாரிய அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

மின்சார வசதி

ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உலாந்தி, பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய வனச்சரகங்கள் உள்ளன. இங்கு எருமபாறை, கோழிகமுத்தி, கூமாட்டி, சர்க்கார்பதி உள்பட 18 மலைக்கிராமங்கள் உள்ளன. 

இந்த நிலையில் மலைக்கிராமங்களில் உள்ள குடியிருப்புகளில் சோலார் மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் மழைக்காலங்களில் போதிய சூரிய வெளிச்சம் இல்லாததால் இரவு நேரங்களில் சோலார் மின் விளக்குகள் எரிவதில்லை.

இதற்கிடையில் எருமபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதி வழியாக மின்சார ஒயர்கள் சென்றும், மின்வசதி ஏற்படுத்தி கொடுக்காமல் இருந்தது. இதுகுறித்து பல ஆண்டுகளாக மலைவாழ் மக்கள் மனு கொடுத்து வந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக எருமபாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பிற்கு மின்சார வசதி செய்து கொடுக்க வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர்.

அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் மின்சார வசதி செய்து கொடுப்பது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்பிரமணியம், துணை இயக்குனர் கணேசன் மற்றும் மின்வாரிய உயர் அதிகாரிகள் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வனச்சரகர் காசிலிங்கம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
மலைவாழ் மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக எருமபாறை மலைக்கிராமத்திற்கு மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட உள்ளது. இதற்காக ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. 

ஒரு மாதத்திற்குள் மின்சார வசதி ஏற்படுத்தப்படும். இதற்கான அனைத்து பணிகளும் நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து மற்ற மலைக்கிராமங்களிலும் ஆய்வு நடத்தி, சாத்திய கூறுகள் உள்ள கிராமங்களில் படிப்படியாக மின்சார வசதி ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்