100 நாள் வேலைத்திட்டத்தில் சிறு,குறு விவசாயிகளும் இணைந்து பயனடையலாம்

100 நாள் வேலைத்திட்டத்தில் சிறுகுறு விவசாயிகளும் இணைந்து பயனடையலாம

Update: 2022-04-06 15:38 GMT
போடிப்பட்டி:
100 நாள் வேலைத்திட்டத்தில் சிறு,குறு விவசாயிகளும் இணைந்து பயனடையலாம் என்று வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேம்பாட்டுப்பணிகள்
கிராமப்புறங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டது. உடல் உழைப்பை மேற்கொள்ளத் தயாராக இருக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு 100 நாள் வேலை மற்றும் அதற்கான ஊதியம் வழங்குவது இந்த திட்டத்தின் நோக்கமாகும். இந்த திட்டத்தின் மூலம் நீர்நிலைகளை உருவாக்குதல் மற்றும் மேம்பாடு செய்தல், நில மேம்பாட்டுப்பணிகள், பொது உட்கட்டமைப்பு வசதிகள், தனி நபர் உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆரம்பகாலங்களில் ஊராட்சி அளவில் மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்த இந்த 100 நாள் வேலைத் திட்டம் தற்போது படிப்படியாக பேரூராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதற்கு வருமான வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆனாலும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருக்கும் மக்களே அதிக அளவில் இந்த திட்டத்தில் இணைந்து பயனடைந்து வந்தனர்.
வேலை அட்டை
இந்த நிலையில் இந்த திட்டத்தில் விவசாயிகளும் இணைந்து பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-
தற்போது கிராமப்புற சிறு, குறு விவசாயிகள் 100 நாள் வேலைத் திட்டத்தில் இணைந்து தங்களுடைய தோட்டத்திலுள்ள பணிகளை மேற்கொள்ளமுடியும். 
இதற்கு சிறு, குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், வங்கி கணக்குப்புத்தகத்தின் முதல் பக்க நகல், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று விண்ணப்பித்து வேலை அட்டை (ஜாப் கார்டு) பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் தங்கள் தோட்டத்துப்பணிகளை மேற்கொள்வதற்கு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.25 ஆயிரம் வருமானம் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்