மரத்தில் கார் மோதி பெண் சாவு; 6 பேர் படுகாயம்
ஊட்டிக்கு சுற்றுலா சென்றபோது மரத்தில் கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் பலியானார். மேலும், 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெங்களூரு:
ஐதராபாத்தைச் சேர்ந்தவர் வெங்கய்யா(வயது 58). இவர் தனது குடும்பத்தினர் ஜெயலட்சுமி(50), ராஜேஷ், பத்மாவதி மற்றும் 2 குழந்தைகளுடன் பெங்களூருவுக்கு வந்தார். பெங்களூருவில் இருந்து காரில் இன்று காலையில் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிக்கு சுற்றுலா புறப்பட்டார். காரை டிரைவர் ஓட்டினார். இன்று காலையில் அவர்கள் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா கலிகவுடனஹள்ளி கேட் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோர மரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. இந்த விபத்தில் ஜெயலட்சுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். வெங்கய்யாவின் கால் துண்டிக்கப்பட்டது. மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்த 6 பேரும் சாம்ராஜ்நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் குறித்து குண்டலுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.