இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகம்
கோடை சீசனில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை ேமற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தொடங்கி வைத்தார்.
ஊட்டி
கோடை சீசனில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த இருசக்கர ரோந்து வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதனை ேமற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தொடங்கி வைத்தார்.
ரோந்து வாகனங்கள்
நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் ‘ஹில் காப்’ என்ற இருசக்கர வாகன ரோந்து பணியை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி, ஊட்டி சேரிங்கிராசில் நடைபெற்றது. இதில் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் கலந்துகொண்டு இருசக்கர வாகனங்களை ரோந்து பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீசார், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பயனடையும் வகையில் ‘ஹில் கபே’ என்ற பெயரில் மலிவு விலை உணவகம் திறந்து வைக்கப்பட்டது. இதனை உணவக பொறுப்பாளர் மூலம் போலீஸ் ஐ.ஜி. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, நீலகிரி போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்வரன் மற்றும் போலீசார் கலந்துகொண்டனர்.
நவீன கேமரா
இதையடுத்து மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
கோடை சீசனையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.
போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக ஒழுங்குபடுத்த 3 இருசக்கர வாகனங்களில் ஆண் போலீசார் தலா 2 பேர், ஒரு இருசக்கர வாகனத்தில் பெண் போலீசார் 2 பேர் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். அவர்களது உடையில் நவீன கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் வாக்கி டாக்கி, இரவு நேரத்தில் ஒளிரும் ஆடைகள் வழங்கப்பட்டு உள்ளது.
குட்டி விமானம்
நகை பறிப்பு, வழிப்பறி கொள்ளை, பெண் வன்கொடுமை போன்ற குற்றங்கள் நடவாமல் தடுக்கும் வகையிலும், போக்குவரத்து விதிமீறல்கள் ஏதும் நடக்காமல் தடுக்கும் வகையிலும் அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன. ரோந்து இருசக்கர வாகனங்கள் குன்னூர், கூடலூரிலும் விரிவுப்படுத்தப்படும். ஆளில்லா குட்டி விமானம் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.