செங்கல் தயாரிக்கும் பணி மும்முரம்

சுட்ெரிக்கும் வெயிலால் நாகை மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-06 13:13 GMT
நாகப்பட்டினம்:
சுட்ெரிக்கும் வெயிலால் நாகை மாவட்டத்தில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. மழை காலங்களில் நிவாரணம் வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல் தயாரிக்கும் பணி
கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பே நாகை மாவட்டத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. வெயில் அதிகமாக இருக்கும் மார்ச், ஏப்ரல், மே மாதங்களை கணக்கில் கொண்டு அதிகளவில் செங்கல் தயாரிக்கப்படும். கோடைக்காலமே செங்கல் தயாரிக்க ஏற்ற காலமாகும். 
நாகை மாவட்டத்தில் செங்கல் தயாரிக்க மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் தயாரிக்கும் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த தொழிலை நம்பி உள்ள பெரும்பாலானோர் இதை விட்டு வேறு வேலைக்கு சென்று விட்டனர்.
நாகை மாவட்டம் மஞ்சக்கொல்லை, பொரவாச்சேரி, குறிஞ்சி, சங்கமங்கலம், வடவூர் நிர்த்தனமங்கலம், ஒரத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செங்கல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
செங்கல் சூளைகள்
இதுகுறித்து செங்கல் சூளை தொழிலாளி ஒருவர் கூறுகையில், 
நாகை மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை செங்கல் தயாரிப்புக்கு ஏற்ற காலமாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடைமடை பகுதிக்கு வருவதற்குள் செங்கல் தயாரிக்கும் பணி முடிவடைந்துவிடும். ஆழியூர் பகுதியை சுற்றி 100-க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன. இதில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்த பகுதியில் தயார் செய்யப்படும் செங்கல்கள்  நாகை, வேளாங்கண்ணி, திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
மண் கிடைக்கவில்லை
புழுதி மண்ணோடு ஆற்றில் இருந்து எடுக்கக்கூடிய சவட்டு மண்ணை சேர்த்து செங்கல் தயாரிக்கப்படுகிறது. குளைத்த மண்ணை அச்சுகளில் போட்டு கல்அறுக்க தொடங்குவோம். பின்னர் நன்கு காய்ந்த கற்களை சூளையில் அடுக்கி வைத்து தீ மூட்டி வேக வைப்போம். தொடர்ந்து சரியான பக்குவத்தில் வெந்த செங்கற்களை விற்பனைக்காக உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்போம். தற்போது செங்கல் தயாரிக்க மண் கிடைக்கவில்லை. 
கடந்த ஆண்டுகளில் சேமித்து வைத்து இருந்த மண்ணை தான் தற்போது செங்கல் தயாரிக்க பயன்படுத்தி வருகிறோம். புதிதாக மண் எடுக்க வாய்ப்பு இல்லாததால், செங்கல் தொழில் முடங்கியுள்ளது. இதனால் விலையும் அதிகரித்துள்ளது.
விலை அதிகரிக்க வாய்ப்பு
கடந்த ஆண்டு ஒரு செங்கல் ரூ.6-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.7-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே செங்கல் தயாரிப்பதற்கு ஏற்ற மண் குவாரியை அரசு தொடங்க வேண்டும். செங்கல் சூளைகளில் தொடங்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும். அப்போதுதான் வேலையின்றி தவித்து வரும் தொழிலாளர்களுக்கு பிழைப்பதற்கு வழி கிடைக்கும்.
நிவாரணம் வழங்க வேண்டும்
ஏப்ரல், மே ஆகிய வெயில் காலங்களில் கோடை மழை பெய்கிறது. அப்போது பெரிய அளவிலான தார்ப்பாய்களை பயன்படுத்தி வெளியில் காயவைத்த செங்கல்களை மூடி வைப்போம். ஆனாலும் மழை நீரில் செங்கல்கள் கரைந்து விடும். மழை காலங்களில் செங்கல் தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார். 
----

மேலும் செய்திகள்