நாகூர் வெட்டாறு பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடக்கம்
நாகூர் வெட்டாறு பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாகப்படடினம்:
நாகூர் வெட்டாறு பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடங்கப்பட்டது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெட்டாறு பாலம் மூடல்
நாகை மாவட்டம் நாகூரில் வெட்டாறு பாலம் உள்ளது. காரைக்காலில் இருந்து நேரடியாக வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து சுற்றுலா வாகனங்களும் நாகூர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்று வந்தன. மேலும் கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக சென்று வந்தன.
தற்போது பராமரிப்பு பணிகள் காரணமாக நேற்றுமுன்தினம் இரும்பு தடுப்புகள் வைத்து இந்த பாலம் மூடப்பட்டன.
எனவே அனைத்து வாகனங்களும் வாஞ்சூர் சோதனைச்சாவடியில் இருந்து நாகூர் நகர சாலை வழியாக நாகைக்கு திருப்பி விடப்பட்டது.
கோட்டைவாசல் படி வழியாக
பின்னர் அங்கிருந்து நாகை மேலக்கோட்டைவாசல் படி வழியாக புத்தூர் ரவுண்டானா, வேளாங்கண்ணி, திருவாரூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.
காரைக்கால் துறைமுகத்தில் இருந்து செல்லும் கனரக வாகனங்கள் திருவாரூர் செல்ல வாஞ்சூர் சோதனைச் சாவடியில் இருந்து திட்டச்சேரி சாலை வழியாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் புனரமைப்பு பணி நடைபெறும் வெட்டாறு பாலத்திற்கு முன்பு கங்களாஞ்சேரி சாலை வழியாகவும் திருப்பி விடப்பட்டுள்ளது.
சீரமைக்கும் பணி
அதேபோல வேளாங்கண்ணியில் இருந்து காரைக்கால் செல்லும் வாகனங்கள் புத்தூர் ரவுண்டானா வந்து, அங்கிருந்து மேலகோட்டைவாசல் படி அருகே இடதுபுறம் பிரியும் மாநில நெடுஞ்சாலை வழியாக நாகூருக்கு சென்று, பின்னர் அங்கிருந்து காரைக்கால் செல்கின்றன.
மேலும் புத்தூர் ரவுண்டானாவில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையில் பிரியும் அமிர்தா பள்ளி அருகே உள்ள வடகுடி சாலை வழியாக வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் சாலையை வந்தடைந்து நாகூர் நகர சாலை வழியாக செல்கின்றன.
கடந்த 2 நாட்களாக நாகூர் வெட்டாறு பாலத்தில் முதல் கட்டமாக விரிவாக்க இணைப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.