பதிவுத்துறை உதவியாளருக்கு எதிரான ஊழல் புகார் வழக்கு தள்ளுபடி-மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவு
பதிவுத்துறை உதவியாளருக்கு எதிரான ஊழல் புகார் வழக்கு தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு டிவிஷன் பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.
மதுரை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றும் சந்திரசேகரன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், அதுகுறித்து உரிய விசாரணை நடத்தி முறையாக நடவடிக்கை எடுக்கும்படி மதுரை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியத்துக்கு மதுரையைச் சேர்ந்த பாக்கியம் சிக்கந்தர் என்ற 70 வயது முதியவர் எழுதிய கடிதம் ஒன்று வந்தது.
அதன்பேரில் தாமாக முன்வந்து வழக்குபதிவு செய்யும்படி மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த வழக்கை விசாரித்து, இதுகுறித்து பதிவுத்துறை செயலாளர், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர், ஊழல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் பதிவாளரின் இந்த மனு தனிநீதிபதி விசாரணைக்கு அணுகலாமா என்பது குறித்து முடிவு செய்ய நிர்வாக நீதிபதி பரேஷ் உபாத்யாய், விஜயகுமார் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனிநீதிபதி இந்த வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று கூறி, சந்திரசேகரன் மீது ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து பதிவு செய்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
-------