பணியில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ கல்வி துறை அதிகாரிக்கு சம்பளம் வழங்க தடை- கர்நாடக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பணியில் அலட்சியமாக செயல்பட்ட மருத்துவ கல்வி துறை அதிகாரிக்கு சம்பளம் வழங்க கர்நாடக அரசுக்கு ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது.;
பெங்களூரு:
டிமான்ஸ் அரசு ஆஸ்பத்திரி
தார்வாரில் மனநல மற்றும் நரம்பியல்(டிமான்ஸ்) அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. அங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவ கல்வி துறை செயலாளர் நவீன் ராஜ் சிங் சரியான முறையில் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஏராளமான நோயாளிகள் பாதிக்கப்படுவதாகவும், டிமான்ஸ் ஆஸ்பத்திரியில் உடனடியாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரணைக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஏற்றுக் கொண்டது.
மூடி விடுங்கள்
அந்த வழக்கு நேற்று கர்நாடக ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆஸ்பத்திரியில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவு தொடங்காமல் இருப்பதற்கு அதிருப்தி தெரிவித்தனர். இதுபற்றி நீதிபதிகள் கருத்து தெரிவித்தபோது கூறியதாவது:-
டிமான்ஸ் ஆஸ்பத்திரியை மேம்படுத்தவும், அங்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பிரிவை தொடங்கவும் தாமதம் ஆனதற்கு மாநில அரசும், மருத்துவ கல்வி துறை செயலாளரும் தான் காரணம். ஆஸ்பத்திரியை மேம்படுத்த அரசுகு விருப்பம் இல்லை என்றால் அதை மூடி விடுங்கள்.
பணியில் அலட்சியம்
தேவையில்லாமல் மக்களின் உயிரோடு விளையாடாதீர்கள். இந்த அரசு மக்களுக்கான வேலையை செய்யாமல் வேறு எந்த வேலையை செய்யப்போகிறது. இன்னும் 3 மாதங்களில் ஆஸ்பத்திரியை புனரமைத்து, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எந்திரம் வாங்கி அந்த பிரிவை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
பணியில் அலட்சியம் காட்டிய மருத்துவ கல்வி துறை செயலாளருக்கு சம்பளம் வழங்க அரசுக்கு தடை விதிக்கிறோம். மேலும் இந்த வழக்கின் விசாரணையை வருகிற 21-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்.
இவ்வாறு கூறி நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.