காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேகம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.
சேலம்:-
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆசிரம கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது.
காவடி பழனியாண்டவர் ஆசிரமம்
சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தில் ஸ்ரீகாவடி பழனியாண்டவர் ஆசிரம் உள்ளது. இங்கு வள்ளி-தேவசேனா சமேத காவடி பழனியாண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த ஆசிரமத்தில் 7 நிலை ராஜகோபுரம் மற்றும் புதிய சன்னதிகளுக்கு கும்பாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது.
இதையொட்டி ஆசிரமத்தில் கடந்த 3-ந் தேதி முதல் யாக பூஜை தொடங்கியது. மேலும் சாமிக்கு தினமும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்று வருகிறது. நேற்று காலை காவடி பழனியாண்டவருக்கு 4-ம் கால யாக பூஜை நடந்தது. 11 மணிக்கு சோடஷ உபசார பூஜை, சதுர்வேதம், திருப்புகழ் பாராயணம் ஆகியவை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 5-ம் கால யாக பூஜை நடந்தது. இரவு 9 மணிக்கு புதிதாக அமைய உள்ள சகல தெய்வங்களுக்கு கண் திறந்தல் நடைபெற்றது.
கும்பாபிஷேகம்
இன்று அதிகாலையில் காவடி பழனியாண்டவருக்கு 6-ம் கால யாக பூகை நடக்கிறது. காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் ராஜகோபுரம் மற்றும் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காவடி பழனியாண்டவர் மற்றும் தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. சாமிக்கு தங்ககவசம் சாத்துபடி செய்யப்படுகிறது.
8 மணிக்கு தேச மங்கையர்கரசின் பக்தி சொற்பொழிவு நிகழ்ச்சியும், 11 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத காவடி பழனியாண்டவருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதையடுத்து அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு 7 மணிக்கு தங்கரதம் புறப்பாடு நடக்கிறது.
மேலும் நாளை (வியாழக்கிழமை) முதல் வருகிற 18-ந் தேதி வரை மண்டல பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ஆசிரம நிர்வாகிகள் எஸ்.சோமசுந்தரம், எஸ்.செல்வி ஆகியோர் செய்து வருகின்றனர்.