வங்கி கணக்கில் ரூ.3½ லட்சம் மோசடி

வாலிபர் உள்பட 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update:2022-04-06 02:19 IST
சேலம்:-
வாலிபர் உள்பட 2 பேரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.3½ லட்சம் மோசடி செய்யப்பட்டது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரெடிட் கார்டு
சேலம் கன்னங்குறிச்சியை சேர்ந்தவர் சாந்தகுமார் (வயது 30). இவரது செல்போன் எண்ணுக்கு தாங்கள் பயன்படுத்தும் கிரெடிட் கார்டுக்கு சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து பரிசுத்தொகை வந்து உள்ளது. எனவே வங்கி கணக்கு விவரங்களை ஆன்லைனில் தெரிவிக்கும் படி குறுஞ்செய்தி வந்தது.
இதை நம்பிய அவர் வங்கி கணக்கு விவரங்களை ஆன்லைனில் தெரிவித்து உள்ளார். சிறிது நேரத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்திற்கு பொருட்கள் வாங்கி இருப்பதாக அவரது செல்போன் எண்ணுக்கு மீண்டும் குறுஞ்செய்தி வந்தது.
போலீசில் புகார்
இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்ட போது அது சுவிட்ச் ஆப் செய்து இருப்பது தெரிந்தது. இது குறித்து சாந்தகுமார் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் மோசடி செய்த மர்ம ஆசாமி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி ஆவணங்கள்
கெங்கவல்லி அருகே உள்ள பச்சமலை பகுதியை சேர்ந்த வேல்முருகன் (30) என்பவரது செல்போனுக்கு கடந்த 1-ந்தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் தங்கள் வங்கி கணக்கின் ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும என்றும், புதுப்பிக்கப்படவில்லை என்றால் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உடனே வேல்முருகன், தனது வங்கி கணக்கு விவரங்களை குறுஞ்செய்தியில் வந்த செயலி மூலம் பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வேல்முருகன் வங்கி கணக்கில் இருந்து ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.
விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், ஆன்லைன் மூலம் தனது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டது குறித்து சேலம் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
2 பேரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்