ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டு கைது

நாகர்கோவிலில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2022-04-05 20:48 GMT
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் ஜவுளிக்கடை அதிபரிடம் ரூ.5 லட்சம் லஞ்சம் வாங்கிய போலீஸ் துணை சூப்பிரண்டை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
ஜவுளிக்கடை அதிபர்
நாகர்கோவில் புன்னைநகரைச் சேர்ந்தவர் சிவகுருகுற்றாலம் (வயது 66). ஜவுளிக்கடை அதிபரான இவர் புன்னைநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரிடம், 2 பேர் வெள்ளிச்சந்தை பகுதியில் உள்ள இடத்தை விலை பேசி ரூ.1.5 கோடி பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த 2 பேரும் வாங்கிய பணத்தை கொடுக்காமல், நிலத்தையும் பத்திரம் எழுதிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக தெரிகிறது.
இதனால் சிவகுருகுற்றாலம் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் (55) புகார் கொடுத்தார். அந்த புகாரை அவர் விசாரித்து வந்தார். அப்போது இந்த புகாருக்கு தீர்வு கண்டால் தனக்கு ரூ.10 லட்சம் லஞ்சமாக தரவேண்டும் என்று சிவகுருகுற்றாலத்திடம், துணை சூப்பிரண்டு தங்கவேல் கூறியதாக தெரிகிறது.
லஞ்சம் கேட்டு தொல்லை
இதற்கிடையே இந்த விசாரணை நடந்து கொண்டிருந்த போது, சிவகுருகுற்றாலத்திடம் பணம் வாங்கி மோசடி செய்த நபர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிலத்தை எழுதிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த துணை சூப்பிரண்டு தங்கவேல், தான் இந்த புகாரை விசாரித்து பேசி முடித்ததால் தானே உங்களுக்கு சேரவேண்டிய நிலம் கிடைத்தது. இதனால் எனக்கு ரூ.5 லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என சிவகுரு குற்றாலத்திடம் கடந்த ஒரு வாரமாக கேட்டு தொல்லைப்படுத்தியதாக தெரிகிறது.
இதை தாங்கிக்கொள்ள முடியாத சிவகுருகுற்றாலம் இதுதொடர்பாக நாகர்கோவிலில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பாலிடம் புகார் செய்தார். இதையடுத்து அவருடைய ஆலோசனையின்பேரில் ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று மாலை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு துணை சூப்பிரண்டு அலுவலகத்துக்கு ஜவுளிக்கடை அதிபர் வந்தார்.
போலீஸ் துணை சூப்பிரண்டு கைது
அங்கிருந்த துணை சூப்பிரண்டு தங்கவேலிடம் ரூ.5 லட்சத்தை லஞ்சமாக அவர் கொடுத்தார். இதை மறைந்திருந்து கண்காணித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால், இன்ஸ்பெக்டர்கள் பெஞ்சமின், ரெமா, சிவசங்கரி மற்றும் போலீசார் கையும், களவுமாக துணை சூப்பிரண்டு தங்கவேலை பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் கொடுக்கப்பட்ட லஞ்ச பணம் ரூ.5 லட்சத்தையும் பறிமுதல் செய்தனர்.
பின்னர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரிடம் நள்ளிரவு வரை விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவர் தங்கியிருந்த நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியில் உள்ள வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் கைது செய்யப்பட்ட துணை சூப்பிரண்டு தங்கவேலுவை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
பரபரப்பு
தங்கவேலுவின் சொந்த ஊர் கோவை மாவட்டம் சூலூர் ஆகும். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் வெளி மாவட்டத்தில் இருந்து குமரி மாவட்டத்துக்கு மாற்றலாகி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் துணை சூப்பிரண்டு கைது செய்யப்பட்ட சம்பவம் போலீசார் மத்தியில் திடீர் பரபரப்பை ஏற்பட்டது.
மேலும் தங்கவேலு மீது துறைரீதியான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்