சொத்துவரியை உயர்த்திய தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர்
சொத்துவரியை உயர்த்திய தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
தஞ்சாவூர்;
சொத்துவரியை உயர்த்திய தி.மு.க. அரசுக்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர் என்று தஞ்சையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கூறினார்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. தஞ்சை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் தஞ்சை பனகல் கட்டிடம் அருகே நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு அவைத்தலைவர்கள் திருஞானசம்பந்தம், எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.பி. பாரதிமோகன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேகர், கோவிந்தராசு, ராமச்சந்திரன், ராஜேந்திரன், ராம.ராமநாதன், ரத்தினசாமி, ராம்குமார், இளமதிசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பால்வள தலைவர் காந்தி வரவேற்றார்.
வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேச்சு
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது
சொத்து வரியை உயர்த்தி விட்டு மத்திய அரசு மீது தி.மு.க. குறை கூறி தவறான செய்தியை மக்களிடம் கொண்டு செல்கிறார்கள். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக இருந்த போது சொத்து வரி உயர்த்தப்பட வில்லை. ஆட்சிக்கு வந்து 10 மாதத்தில் 150 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டுவாடகை, தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசி உயரும்.
பாடம் புகட்ட தயாராகி விட்டனர்
கட்டுமான பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தி.மு.க. அரசு விடியல் தரும் அரசு அல்ல, விடியா அரசு என்பதை மக்கள் உணர தொடங்கி விட்டனர். அதற்கு மக்கள் பாடம் புகட்ட தயாராகி விட்டனர். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட அ.தி.மு.க. அரசு கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க. நிறுத்தி விட்டது. இன்னும் பால், பஸ் கட்டணம், மின்சார கட்டணத்தையும் உயர்த்த தயாராகி வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி, ரமேஷ், திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் நாகராஜன், ஜெயலலிதா பேரவை துணைத்தலைவர் பாலை.ரவி, அண்ணா தொழிற்சங்க துணைத்தலைவர் வீரராஜ், மருத்துவர் அணி செயலாளர் சங்கர் மற்றும் ஒன்றிய, நகர செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் நன்றி கூறினார்.