குன்னம்:
குளிக்க சென்றனர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அசூர் கிராமத்தில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் அழகுதுரை. இவரது மனைவி அழகம்மாள். இந்த தம்பதிக்கு பிரசாந்த்(வயது 13) என்ற மகனும், ஹன்சிகா(4) என்ற மகளும் உண்டு. இதில் பிரசாந்த் அசூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 5-ம் வகுப்பு வரை படித்துள்ளார். மேலும் அவர் மனவளர்ச்சி குன்றிய நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை அழகம்மாள் தனது மகள் ஹன்சிகா, மகன் பிரசாந்த் ஆகியோருடன் அசூர் கல்லாங்காட்டு ஏரியில் குளிக்கச் சென்றார். அப்போது பிரசாந்த் கால் வழுக்கி ஏரியில் விழுந்தார். துணி துவைத்துக் கொண்டிருந்த அழகம்மாள் அதைக்கண்டு, பிரசாந்தை கையால் பிடித்து வெளியே இழுக்க முயன்றார். இதேபோல் ஹன்சிகாவும் அவரை வெளியே இழுக்க முயன்றார். அப்போது ஹன்சிகா தவறி ஏரியில் விழுந்து மூழ்கினார்.
சாவு
இதனைக் கண்ட அழகம்மாள் பதற்றத்தில் பிரசாந்தை விட்டுவிட்டு, ஹன்சிகாவை இழுத்து ஏரிக்கரையில் விட்டுள்ளார். அதற்குள் பிரசாந்த் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அழகம்மாள் சத்தம் போட்டார். அதைக்கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் வந்து ஏரியில் இறங்கி பிரசாந்தை தேடினர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பின்னர் ஏரியில் இருந்து பிரசாந்தை பிணமாக மீட்டனர்.
இதுகுறித்து அழகுதுரை கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.