சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார்.;

Update: 2022-04-05 20:00 GMT
சிவகாசி, 
சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். 
ஆர்ப்பாட்டம் 
விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசி பாவடி தோப்பு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.பி. ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். 
முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் வரவேற்றார்.  ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
சொத்து வரி உயர்வை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடக்கிறது. மாநகராட்சி பகுதியில் 150 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. தி.மு.க.வுக்கு ஓட்டு போட்ட மக்களை இந்த அரசு ஏமாளியாக்கி, கோமாளியாக்கி உள்ளது. கடந்த 10 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் சொத்து வரி உயர்த்தவில்லை. இந்த வரி உயர்வை இந்த பகுதியில் உள்ள பட்டாசு, தீப்பெட்டி, விவசாய தொழிலாளர்கள் தாங்கி கொள்ள முடியாது. 
சொத்து வரி 
வீட்டு வரியை கட்டமுடியாமல் பலர் வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். இதனால் தற்போது உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். இதற்காக அறிவித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். 
இந்த பகுதி மக்கள் அதிகளவில் பணியாற்றி வரும் பட்டாசு, தீப்பெட்டி தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரி உயர்வை இந்த மக்கள் எப்படி தாங்கி கொள்ள முடியும். நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த 1 மாதத்தில் தி.மு.க. சொத்து வரியை உயர்த்தி உள்ளது. இப்படியே அடுத்தடுத்து அனைத்து பொருட்களின் விலையும் உயரும். 
இவ்வாறு அவர் பேசினார். 
கண்டன கோஷம் 
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய கோரி அ.தி.மு.க.வினர் கண்டன கோஷம் எழுப்பினர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் எம்.எல்.ஏ. மான்ராஜ், முன்னாள் அமைச்சர் இன்பதமிழன், முன்னாள் எம்.எல்.ஏ. சந்திராபிரபாமுத்தையா, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி, மாநில நிர்வாகி வேண்டு ராயபுரம் சுப்பிரமணியம், மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்