பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா கொடியேற்றம்

பாபநாசம் கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2022-04-05 19:19 GMT
விக்கிரமசிங்கபுரம்:
பாபநாசம் பாபநாச சுவாமி கோவிலில் சித்திரை விசு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள், கொடிமரம் மற்றும் நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், துணைத்தலைவர் திலகா மற்றும் பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து சிவனடியார்களும், திரளான பக்தர்களும் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருவிழா நாட்களில் காலை மற்றும் இரவு ஏகசிம்மாசனம், கைலாச பருவதம், அன்னம், பூதம், சிம்மம், ரிஷபம், கேடயம், வெட்டுங்குதிரை, காமதேனு, தந்தப் பூம்பல்லக்கு ஆகிய வாகனங்களில் சுவாமி- அம்பாள் வீதி உலா நடைபெறும். 8-ம் திருநாளான 12-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலையில் நடராஜர் கேடயத்தில் வெள்ளை சாத்தி புறப்பாடு, மாலை 4 மணிக்கு பச்சை சாத்தி அலங்காரத்தில் புறப்பாடு நடைபெறும்.

13-ந் தேதி காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. 10-வது திருநாளான 14-ந் தேதி மதியம் 1 மணிக்கு சித்திரை விசு, தீர்த்தவாரியும், இரவு 8 மணிக்கு பாபநாசர்- உலகாம்பிகை தெப்ப உற்சவமும், 15-ந் தேதி அதிகாலை 1 மணிக்கு சுவாமி-அம்பாள் ரிஷப வாகனத்தில் திருமண கோலத்தில் அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்தலும் நடைபெறும். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தக்கார் மற்றும் உதவி ஆணையர் சங்கர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்