நெல்லை, தென்காசி வழியாக சென்னைக்கு சிறப்பு ரெயில்கள்

நெல்லை, தென்காசி வழியாக சென்னைக்கு கோடை விடுமுறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

Update: 2022-04-05 19:00 GMT
நெல்லை:
தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக சென்னை தாம்பரம்- நாகர்கோவில் மற்றும் தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே வாராந்திர கோடை விடுமுறை சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

அதன்படி சென்னை தாம்பரம்-நாகர்கோவில் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 22-ந்தேதி முதல் ஜூன் 24-ந்தேதி வரை தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவிலில் இருந்து வாராந்திர சிறப்பு ரெயில் 24-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.  

இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். 

தென்காசி வழியாக நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ெரயில் வருகிற 17-ந் தேதி முதல் ஜூன் 26-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரெயில் வருகிற 18-ந் தேதி முதல் ஜூன் 20-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.30 மணிக்கு மதுரைக்கும், 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்து சேரும்.

இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பை, சேரன்மாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த தகவலை, தெற்கு ெரயில்வே தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்