கணவர் தற்கொலை செய்து கொண்ட கிணற்றில் கைக்குழந்தையுடன் குதித்த பெண்; காப்பாற்ற முயன்ற தாயுடன் மீட்பு-திருச்செங்கோடு அருகே பரபரப்பு
கணவர் தற்கொலை செய்து கொண்ட கிணற்றில் கைக்குழந்தையுடன் பெண் குதித்தார். அவரை காப்பாற்ற முயன்ற தாயுடன் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்டார்.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு அருகே நடந்த இந்த பரபரப்பு சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
என்ஜினீயர் தற்கொலை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த பால்மடை பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சக்திகுமார். ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முத்துசாமி மகள் கார்த்திகா (வயது 29) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 21 பவுன் நகைகள் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு 7 வயதில் ஜீவன்யா என்ற மகளும், 2 வயதில் சுதர்சன் என்ற மகனும் உள்ளனர்.
கொரோனா காலத்தில் சக்திகுமார் தனது என்ஜினீயர் வேலையை இழந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 10 மாதத்துக்கு முன்பு பால்மடை அருகே உள்ள 60 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். இதனால் கார்த்திகா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
நகையை தர மறுப்பு
கார்த்திகா, திருமணத்தின் போது தனக்கு பெற்றோர் கொடுத்த 21 பவுன் நகையை மாமனார் சுப்பிரமணி, மாமியார் சாரதா ஆகியோரிடம் கேட்டு வந்தார். ஆனால் அவர்கள் நகைகள் வங்கி லாக்கரில் இருப்பதாக கூறி வந்தனர். இதனால் அவர்களுக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் நேற்று மாலை கார்த்திகா தனது குழந்தை சுதர்சனுடன் மாமனார் வீட்டுக்கு சென்றார். அங்கு சுப்பிரமணி, சாரதாவிடம் குழந்தைகளை வைத்து கொண்டு பிழைப்பு நடத்த மிகவும் கஷ்டமாக உள்ளதாகவும், அதனால் தனது 21 பவுன் நகையை திருப்பி தருமாறும் உருக்கமாக கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் தர மறுத்ததால், அவர்களிடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
குழந்தையுடன் கிணற்றில் குதித்தார்
இதனால் மனமுடைந்த கார்த்திகா, கணவர் குதித்து இறந்த கிணற்றில், தானும் மகனுடன் குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் மனவேதனையில் குழந்தையுடன் கிணற்றில் குதித்தார். இதனை பார்த்த கார்த்திகாவின் தாய் சரஸ்வதி அவர்கள் 2 பேரையும் காப்பாற்ற எண்ணினார்.
உடனடியாக ஓடிச்சென்ற அவர் 2 பேரையும் காப்பாற்றும் முனைப்பில் கிணற்றில் குதித்தார். மேலும் மகளையும், பேரனையும் காப்பாற்றினார். 60 அடி ஆழ கிணற்றில் 30 அடிக்கு தண்ணீர் இருந்ததால் அவர்களால் அதிலிருந்து வெளியேற முடியவில்லை. இதனால் அவர்கள் மோட்டார் கயிறை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினர்.
தீயணைப்பு துறையினர் மீட்டனர்
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் உடனடியாக திருச்செங்கோடு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சாமிநாதன், ஜெகநாதன், செல்வம், ராஜசேகர் விரைந்து சென்றனர். அவர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினர்.
பின்னர் கிணற்றில் தத்தளித்த கார்த்திகா, சரஸ்வதி மற்றும் குழந்தையை பத்திரமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதையடுத்து அவர்கள் 3 பேரும் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து திருச்செங்கோடு ஊரக போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த சம்பவம் நேற்று அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.