கைதான 3 பேரை காவலில் எடுக்க போலீசார் நடவடிக்கை
காதலனுடன் கடற்கரைக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 வாலிபர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.;
ராமநாதபுரம்
காதலனுடன் கடற்கரைக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைதான 3 வாலிபர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கூட்டு பலாத்காரம்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவர், தனது காதலியான கல்லூரி மாணவியுடன், ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மூக்கையூர் கடற்கரைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்றிருந்தார். அப்போது, அவர்களிடம் 3 பேர் கும்பல் பணம் மற்றும் நகைகளை பறித்துக்கொண்டது.
மேலும் அந்த 3 பேரும் சேர்ந்து கல்லூரி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் நகை மற்றும் வழிப்பறி தொடர்பாக அருப்புக்கோட்டை போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதுதொடர்பாக கே.வேப்பங்குளம் பத்மேஸ்வரன்(வயது24), நத்தகுளம் தினேஷ்குமார்(23) ஆகிய இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றபோது 2 போலீசாரை வாளால் வெட்டிவிட்டு, தப்ப முயன்ற அவர்கள் இருவரும் கைதாகினர்.
இதனிடையே இந்த சம்பவத்தில் முக்கிய நபராக கருதப்படும் அஜீத் விக்னேஸ்வரன்(24) என்பவர் திருப்பூரில் கைது ெசய்யப்பட்டார்.
சிறையில் அடைப்பு
கூட்டு பலாத்கார சம்பவம் தொடர்பாக மாணவியிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. இந்த சம்பவம் நடந்த இடம் ராமநாதபுரம் மாவட்ட பகுதியாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை ராமநாதபுரம் மாவட்ட காவல்துறைக்கு மாற்றி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ராகாக் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அதுதொடர்பான ஆவணங்களை பெற்று சாயல்குடி போலீசார் வழக்கினை விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவிட்டார்.
சாயல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசித்ரா இந்த வழக்கினை கற்பழிப்பு வழக்காக மாற்றம் செய்து, விசாரணையை தொடங்கினார். இந்நிலையில் நகை பறிப்பு, போலீசார் மீது தாக்குதல், வழிப்பறி வழக்குகளில் கைதாகி உள்ள 3 வாலிபர்களையும் கற்பழிப்பு வழக்கிலும் கைது செய்து போலீசார் மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர். இதற்கான முறையாக வழக்கு இணைப்பு ஆவணத்தினை கோர்ட்டு மூலம் பெற்று, மதுரை சிறையில் நேற்று முன்தினம் போலீசார் வழங்கி உள்ளனர்.
காவலில் எடுக்க திட்டம்
இதுதவிர, கூட்டு பலாத்காரம் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக தொடர் விசாரணை நடத்த மேற்கண்ட 3 வாலிபர்களையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கான முறையான கடிதம் காவல்துறையின் சார்பில் கடலாடி கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி கிடைத்ததும் 3 வாலிபர்களும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படுவதோடு சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர புலன்விசாரணை நடத்தி, விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளார். இதற்கான விசாரணையை துரிதப்படுத்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மணிகண்டன் (கமுதி), சுபாஷ் (கீழக்கரை) ஆகியோர் தலைமையில் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.