காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்
காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று நலச்சங்க கூட்டத்தில் வலியுறுத்தினர்
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்க தொடக்க நிகழ்ச்சி மற்றும் முதல் கூட்டம் நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு காது கேளாதோர் சங்க கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். தமிழ்நாடு காது கேளாத மகளிர் சங்க தலைவி காயத்ரி, பொதுச்செயலாளர் செல்வகுமாரி, பொதுக்குழு உறுப்பினர் ஷோபனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகராட்சி ஆணையர் பாலு மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் காது கேளாதோருக்கான மாதாந்திர உதவித் தொகையை ரூ.ஆயிரத்திலிருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஒரு சதவீதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். காது கேளாத இளம் பெண்களுக்கு திருமண உதவித்தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். காது கேளாத மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பிரகாஷ், பாலாஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.