சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-04-05 18:13 GMT
தர்மபுரி:
சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரியில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வை கண்டித்து தர்மபுரி நகராட்சி அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் கே.சிங்காரம், முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர்.வெற்றிவேல், எம்.எல்.ஏ.க்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பூக்கடை ரவி வரவேற்றார்.
ஏழை நடுத்தர மக்களை பெரிதும் பாதிக்கும் சொத்து வரி உயர்வுக்கு கண்டனம் தெரிவித்தும், சொத்து வரி உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தி.மு.க. கொடுத்த தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
கட்டுப்படுத்த வேண்டும்
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழ்நாட்டில் சொத்து வரி உயர்த்தப்பட மாட்டாது என்று தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. தற்போது சொத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வரும் தி.மு.க. அரசு சொத்து வரியை உயர்த்தி இருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும். தமிழகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த விலைவாசி உயர்வையும் தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், மதிவாணன், வேலுமணி, நீலாபுரம் செல்வம், விஸ்வநாதன், சேகர், செந்தில்குமார், சார்பு அமைப்பு மாவட்ட செயலாளர்கள் பழனிசாமி, கோவிந்தசாமி உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பெண்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்