சொத்து வரி உயர்வை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
சிவகங்கை,
தமிழக அரசு சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து சிவகங்கையில் அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சொத்துவரி உயர்வு
தமிழக அரசு வீட்டு வரியை உயர்த்தியதை கண்டித்து சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். நகர் செயலாளர் ராஜா வரவேற்று பேசினார். இதில் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
திமுக அரசு தற்போது சாமானிய மக்களின் வீடுகளுக்குக் கூட 50-ல் இருந்து 150 சதவீதம் வரை வீட்டு வரியை உயர்த்தி உள்ளது. அதை ரத்து செய்யக்கோரி தான் அ.தி.மு.க. போராடி வருகிறது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலம் கண்மாய்கள் ஏரிகள் தூர்வாரப்பட்டு மழைநீர் தேங்கி நின்றது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்தப் பணியில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாய சங்கங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தைக் கூட இந்த அரசு இதுவரை வழங்காத நிலை உள்ளது. சொத்து வரி உயர்வை பற்றி கேட்டால் மத்திய அரசு தான் காரணம் என்று கூறுகிறார்கள். கடந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்களை ரத்து செய்துவிட்டார்கள். பொதுமக்களை பாதிக்கும் எந்தத் திட்டம் கொண்டுவந்தாலும் அ.தி.மு.க. அதை எதிர்த்து போராடும் என்றார்.
கோஷம்
ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி உயர்வை அரசு செய்ய வலியுறுத்தியும் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்ததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன,
ஆர்ப்பாட்டத்தில் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் கருணாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், முன்னாள் எம்.எல்.ஏ. நாகராஜன், கூட்டுறவு ஒன்றிய தலைவர் புவனேந்திரன், ஆவின் தலைவர் அசோகன், பாம்கோ தலைவர் நாகராஜன், மாணவரணி மாநில துணைச்செயலாளர் ஆசைத்தம்பி, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் இளங்கோவன், தேவகோட்டை நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட இணைச் செயலாளர்கள் ராமநாதன், சுந்தரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் கோபி, செல்வமணி, சேவியர், பழனிச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.