கண்ணில் இருந்து எறும்பு வரும் மாணவிக்கு சிகிச்சை; கலெக்டர் உத்தரவு
ஆற்காடு அருகே மாணவியின் கண்ணில் இருந்து தொடர்ந்து எறும்புகள் வெளியேறி வருகிறது. அவருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
ராணிப்பேட்டை
ஆற்காடு அருகே மாணவியின் கண்ணில் இருந்து தொடர்ந்து எறும்புகள் வெளியேறி வருகிறது. அவருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவின்பேரில் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கண்ணில் இருந்து வெளியே வரும் எறும்புகள்
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டை அடுத்த சாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் காண்டீபன்- பூங்கொடி தம்பதி. இவர்கள் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாலினி (வயது 14) என்ற மகள் உள்ளார். இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். ஷாலினி 13 வயது வரை மற்ற பிள்ளைகளைப் போலவே இயல்பான நிலையில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டாக அவரது வலது கண் வீக்கமடைந்துள்ளது. மேலும் அந்த கண்ணில் இருந்து தொடர்ச்சியாக நாளொன்றுக்கு 15-க்கும் மேற்பட்ட எறும்புகள் வரத்தொடங்கியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலினியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உடனடியாக அரியவகை பாதிப்புக்கு உள்ளாகியுள்ள ஷாலினியை பல்வேறு கண் டாக்டர்களிடம் அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அப்போது மாணவியின் கண் இயல்பான நிலையில் இருப்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கண்ணில் இருந்து தொடர்ந்து எறும்பு வருவதால் ஷாலினி படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை
தனது மகளுக்கு ஏற்பட்டுள்ள அரிய வகை பாதிப்பை எவ்வாறு சரி செய்வது என தெரியாமல் அவரது தாயார் பூங்கொடி ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியனிடம் உதவிகேட்டு மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடியாக மாணவிக்கு பரிசோதனை செய்ய வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவு டாக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து மாணவி ஷாலினி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனை கண் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.