மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை
ராணிப்பேட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் முகாம் நடந்தது. கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் முன்னிலை வகித்தார். முகாமுக்கு அமைச்சர் ஆர்.காந்தி தலைமை தாங்கி, 373 பேருக்கு அடையாள அட்டையும், 3 பயனாளிகளுக்கு ரூ.26 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 27 ஏரி நீர்ப் பாசன சங்க தலைவர்கள், 112 உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சியும் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் 11 இருளர் இன மக்களுக்கும், 8 திருநங்கைகளுக்கும் ரேஷன் அட்டைகளையும், பணியின் போது உயிரிழந்த 2 அரசு பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தின் மூலம் 2 பேருக்கு சலவை பெட்டி, விபத்தில் உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், நகர மன்ற தலைவர் சுஜாதா வினோத், ஒன்றியக் குழுத் தலைவர் வடிவேலு, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.