ரெயிலில் கஞ்சா கடத்திய கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது

திருச்செந்தூரில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் கஞ்சா கடத்திய கணவன்-மனைவி உள்பட 3 பேர், மயிலாடுதுறையில் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-05 17:58 GMT
மயிலாடுதுறை
மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பாஸ்கரன், சதீஷ்குமார், சரவணன், பஞ்சவர்ணம் ஆகியோர் நேற்று அதிகாலையில் ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 
அதிகாலை 5 மணி அளவில் திருச்செந்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில், மயிலாடுதுறை ரயில் நிலையத்தை வந்தடைந்தது.
கஞ்சா கடத்தல்
அப்போது ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், அந்த ெரயில் பெட்டி ஒன்றில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இருந்த பைகளை சோதனை மேற்கொண்டனர். 
அப்போது அந்த பைகளில் கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பைகளை கொண்டு வந்த பெண் உள்பட 3 பேரிடம் விசாரணை நடத்தியதில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் ெரயிலில் இருந்து இறக்கி ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், திருச்சி தாராநல்லூரை சேர்ந்த முருகேசன் மகன் சிவசங்கர்(வயது 25), அவரது மனைவி சத்யா(20), இவர்களது உறவினர் தியாகராஜன் மகன் சரபேஸ்வரன்(19) என்பதும், இவர்கள் 3 பேரும் திருச்சியில் இருந்து கஞ்சாவை கடத்தி கடலூர் கொண்டு செல்ல இருந்ததும் தெரிய வந்தது. 
அவர்கள் எடுத்துச்சென்ற 5 பைகளில் மொத்தம் 46 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.9 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 
கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது
இதுகுறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவசங்கர், சத்யா, சரபேஸ்வரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.  பின்னர் மேல் விசாரணைக்காக அவர்கள் 3 பேரும் தஞ்சை ரயில்வே போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்