கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கேரளாவுக்கு கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.;
போத்தனூர்
கோவையில் இருந்து கேரளாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டா் கோபிநாத் தலைமையில் கேரளா எல்லையான வாளையாறு மற்றும் வேலந்தாவளம் நெடுஞ்சாலையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேலந்தாவளம் வழியாக வந்த சரக்கு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் சுமார் 22 மூட்டைகளில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தைச் சேர்ந்த பெர்னாண்டஸ் (வயது 39) என்பவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கோவையில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை கேரளா கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோ, மற்றும் 1 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வாளையாறு சோதனைச்சாவடி வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிவந்த கோவையை சேர்ந்த சாதீக், பாலக்காட்டை சேர்ந்த ஜோவா ஆகியோரை போலீசார் கைது செய்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.