கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி
கள்ளுக்கான தடையை நீக்க வலியுறுத்தி பொள்ளாச்சியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் டாஸ்மாக் கடைக்கு தடைவிதித்து, கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞர் அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். இதில் கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி, கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க ஆனைமலை ஒன்றிய செயலாளர் சண்முக வடிவேல், நகர செயலாளர் கோபால்சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கூறியதாவது:-
கொப்பரை தேங்காய்
ரேஷன் கடைகளில் பாமாயில் கொடுப்பதை நிறுத்தி விட்டு தேங்காய் எண்ணெய் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலையாக கொப்பரை தேங்காய் கிலோவுக்கு ரூ.150 வழங்க வேண்டும்.
அரசு டாஸ்மாக் கடைகளை கொண்டு தமிழக மக்களை கெடுத்து கொண்டிருக்கிறது. எனவே டாஸ்மாக்கிற்கு தடை விதித்து கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும்.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை நிபந்தனை இன்றி விவசாய பணிக்கு மாற்ற வேண்டும். நோயால் பாதிக்கப்பட்ட தென்னை மரத்திற்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.