கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கியது
2 ஆண்டுகளுக்கு பிறகு கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரை திருவிழா நேற்று தொடங்கியது
உளுந்தூர்பேட்டை,
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த திருநங்கைகள் மட்டுமின்றி மராட்டியம், கர்நாடகா, ஆந்திரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து திரளான திருநங்கைகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். இத்தகையை சிறப்பு வாய்ந்த இந்த சித்திரை திருவிழா நேற்று சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதையொட்டி சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் கூவாகம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் தங்களது வீடுகளில் தயார் செய்த கூழ் குடங்களை ஊர்வலமாக கோவிலுக்கு எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு கூழ் படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
திருநங்கைகள் சாமி தரிசனம்
இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் கூழ் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் மட்டுமின்றி திருநங்கைகளும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் சிகர நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி சுவாமி திருக்கண் திறப்பு, திருநங்கைகளுக்கு தாலி கட்டுதல், 20-ந்தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது.
22-ந்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் விழா முடிவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
கொரோனா தொற்று காரணமாக இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகள் திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததை தொடர்ந்து இந்தாண்டு திருவிழா நடத்தப்படுவதால் பக்தர்கள், திருநங்கைகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.