கொத்தமங்கலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கொத்தமங்கலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் போராட்டம் செய்து மூடப்பட்ட டாஸ்மாக் கடை மீண்டும் திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-04-05 17:25 GMT
கீரமங்கலம்:
டாஸ்மாக் கடைகள் உடைப்பு
கீரமங்கலம் அருகே கொத்தமங்கலத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு டாஸ்மாக் கடைகளால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பெண்களுக்கு அதிகம் தொல்லை என்றும் கூறி இரண்டு டாஸ்மாக் கடைகளையும் மூடக்கோரி கடந்த 2017 மே 20-ந் தேதி மாதர் சம்மேளனம் இந்திராணி தலைமையில் சுமார் 2 ஆயிரம் பெண்கள் திரண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பேச்சுவார்த்தைக்கு வந்த கலால் மற்றும் டாஸ்மாக், வருவாய்த்துறை அதிகாரிகள் அப்போதைய சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய அமைச்சருமான மெய்யநாதன் முன்னிலையில் ஒரு மாதத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுவதாக உறுதி அளித்தனர். ஆனால் எழுதிக் கொடுக்க மறுத்து அங்கிருந்து வெளியேற முயன்ற போது எழுதிக் கொடுத்துவிட்டு போங்கள் என்று பெண்கள் அதிகாரிகள் காலில் விழுந்தும் கண்டுகொள்ளாமல் வெளியேறிய அதிகாரிகளின் கார்களை மறித்து போராடினர். 
பின்னர் பெண்கள் அங்கிருந்து ஊர்வலமாகச் சென்று சம்மட்டி உள்ளிட்ட கனமான பொருட்களைக் கொண்டு 2 டாஸ்மாக் கடைகளையும் அடித்து உடைத்து சூறையாடினார்கள். ஒரு மணி நேரத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகளும் உடைக்கப்பட்ட நிலையில் அப்போதைய மாவட்ட கலெக்டர் கணேஷ், இரண்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகிறது. இனிமேல் கொத்தமங்கலம் ஊராட்சிக்குள் டாஸ்மாக் கடைகள் திறப்பதில்லை என்று உறுதி அளித்தார். 
ஆர்ப்பாட்டம் 
அதன் பிறகு மீண்டும் ஒருமுறை டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடந்த போது சாலை மறியல் போராட்டம் செய்தனர். கிராம சபைக் கூட்டத்தில் டாஸ்மாக் கடை வேண்டாம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இன்று முத்துமாரியம்மன் கோவில் செல்லும் வழியில் விவசாய பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. 
 இதனையறிந்த தி.மு.க ஊராட்சி மன்ற தலைவி சாந்தி தலைமையில் தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர் மன்மதன், நாம்தமிழர் கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள் என பலர் வாடிமாநகர் கடைவீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து டாஸ்மாக் கடையை மூடவில்லை என்றால் ஊருக்குள் விளம்பரம் செய்து பெண்களை திரட்டி போராட்டம் செய்வோம் என்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பெண்கள் உள்பட 33 பேர் மீது வழக்கு 
இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி ஊராட்சி மன்ற தலைவி சாந்தி தலைமையில் கடைவீதியில் ஆர்ப்பாட்டம் செய்த பெண்கள் உள்பட 33 பேர் மீது கீரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்