நெகமம் அருகே வழிகாட்டாத வழிகாட்டி பலகை

வழிகாட்டாத வழிகாட்டி பலகையை வழிகாட்ட செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-04-05 17:24 GMT
நெகமம்

வாகனங்களில் தொலைதூர பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழிகாட்டியாக வழிகாட்டி பலகை விளங்கி வருகிறது. தற்போது இதற்கான வசதி செல்போனில் இருந்தாலும் சாலையோரத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும் வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் உதவியாக இருந்து வருகிறது. 

இதற்காக சாலையோரத்தில் ஆங்காங்கே வழிகாட்டி பலகைகளும் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் உள்ள ராசக்காபாளையத்தில் கோவை, அவினாசி, திருப்பூர் செல்வது குறித்து வழிகாட்டி பலகை வைக்கப்பட்டு இருந்தது. 

இதற்கிடையே ராசக்காபாளையத்தில் இருந்து சின்னேரிபாளையம் வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடந்தது. இதற்காக சில இடங்களில் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பலகைகள் அகற்றப்பட்டு சாலையோரங்களில் வைக்கப்பட்டது. 

தற்போது இந்த பகுதியில் சாலை அகலப்படுத்தும் பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும் அகற்றப்பட்ட வழிகாட்டி பலகைகள் மீண்டும் அந்த இடங்களில் வைக்கப்படவில்லை. 

இதனால் அந்த வழியாக புதிதாக செல்லும் வாகன ஓட்டிகள் எந்த இடங்களுக்கு எப்படி செல்ல வேண்டும் என்று குழம்பி வருகிறார்கள். எனவே சாலையோரத்தில் வீணாக கிடக்கும் வழிகாட்டி பலகைகளை அதற்கான இடத்தில் வழிகாட்டும் வகையில் வைத்தால் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். 

அதை செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த கோரிக்கையை அதிகாரிகள் நிைறவேற்றலாமே...!

மேலும் செய்திகள்