நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்

தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

Update: 2022-04-05 17:17 GMT
தேனி: 

இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவருடன் இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் சிலரும் வந்தனர். மாவட்ட கலெக்டர் முரளிதரனை சந்தித்து அர்ஜூன் சம்பத் ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். பின்னர்  அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாவட்ட கலெக்டரிடம் 5 பிரச்சினைகள் தொடர்பான மனுவை சமர்ப்பித்துள்ளேன். தேனி மாவட்டம், பொட்டிப்புரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வுக்கூடம் தகவல் தொழில்நுட்பம், புவியியல் ஆராய்ச்சி, மருத்துவம், கல்வி போன்றவற்றை அடுத்தக்கட்டத்தில் அழைத்துச் செல்லக்கூடியது. 

ஆனால், இந்தியா குறிப்பாக தமிழகம் அறிவியலில் முன்னேறிவிடக்கூடாது என்பதற்காக இந்தியாவின் வளர்ச்சியை விரும்பாத சில சக்திகள் பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி வருகிறார்கள். முதல்-அமைச்சரும் இந்த திட்டம் வரக்கூடாது என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். இந்த நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.

 முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழக உரிமைகளை பாதுகாக்க வேண்டும். தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் தமிழர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும். டொம்புச்சேரியில் சாதி ரீதியான பதற்றத்தை உருவாக்கி மக்களை மதமாற்றம் செய்ய முயற்சி செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும். 


தேவதானப்பட்டியில் சந்தேகத்திற்கிடமான வகையில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் உள்ளது. இந்த நிலைமை மாற வேண்டும். ஆண்டிப்பட்டியில் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் ஆக்கிரமிப்பில் உள்ளது. அந்த ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட வேண்டும். தமிழகத்தில் சொத்து வரியை உயர்த்தியதை கண்டித்து பா.ஜ.க. நடத்தும் ஆர்ப்பாட்டத்துக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தில் நிதி அமைச்சரை மாற்ற வேண்டும். அனுபவமிக்க நபரை நிதியமைச்சராக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்