மகனுடன் தாய் தர்ணா

மகனுடன் தாய் தர்ணா

Update: 2022-04-05 17:15 GMT
காங்கயம்:
காங்கயம் அருகே ஆலம்பாடி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராதாமணி (வயது 45). கணவர் இறந்து விட்டதால் தனது மகனுடன் வசித்து வருகிறார். ராதாமணிக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த  நிலத்திற்கு பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் பாசன வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 12 வருடங்களாக அருகில் இருக்கும் நில உரிமையாளரும், அதிகாரிகளும் இணைந்து தனக்கு வரவேண்டிய கால்வாயை மூடி தண்ணீர் வழங்காமல் இருந்ததாக புகார் தெரிவித்தார்.
மேலும் கடந்த 1½ ஆண்டு காலமாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம், புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேற்று தனது மகனுடன் காங்கயம் தாசில்தார் அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கையில் தட்டி ஏந்தியவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உரிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே தர்ணா போராட்டத்தை கைவிடுவேன் என்று கூறிய ராதாமணி சுமார் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்பு வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றார். அதேபோல் உறுதியளித்தபடி அதிகாரிகளும் நேற்று மாலை நேரில் சென்று பார்வையிட்டு அவருக்கு தண்ணீர் செல்வதற்கான வழித்தடங்களை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

மேலும் செய்திகள்