போலி பதிவு எண்ணுடன் இயங்கி வந்த 2 தனியார் பஸ்களை காங்கயம் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்

போலி பதிவு எண்ணுடன் இயங்கி வந்த 2 தனியார் பஸ்களை காங்கயம் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்

Update: 2022-04-05 16:59 GMT
காங்கயம்,:
போலி பதிவு எண்ணுடன் இயங்கி வந்த 2 தனியார் பஸ்களை காங்கயம் வட்டார போக்குவரத்து துறையினர் பறிமுதல் செய்தனர்.
 போலி பதிவு எண்ணுடன்
திருச்சி, காங்கயம், பல்லடம், கோவை ஆகிய பகுதிகளில் போலி பதிவு எண்ணுடன் நள்ளிரவில் சில தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருவதாக திருப்பூர் தெற்கு ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து அதிகாரிகள் ஒரு வாரம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். 
இந்த நிலையில் காங்கயம் மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணியளவில் பல்லடம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் வந்த 2 தனியார் பஸ்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
2 பஸ்கள் பறிமுதல்
இதில் புதுச்சேரி பதிவு எண் கொண்ட தனியார் பஸ் போலி பதிவு எண்ணுடனும், அருணாச்சல பிரதேசம் பதிவு எண் கொண்ட மற்றொரு தனியார் பஸ் முறையான ஆவணங்கள் இல்லாமலும் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து காங்கயம் மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி முறையான ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வந்த அந்த 2 பஸ்களையும் பறிமுதல் செய்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து காங்கயம் மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் சத்தியமூர்த்தி கூறியதாவது:-
முறையான ஆவணங்கள் 
புதுச்சேரி பதிவு எண் கொண்ட பஸ் பகலில் திருச்சியில் இருந்து புறப்பட்டு பயணிகளை ஏற்றிக்கொண்டு கோவை செல்கிறது. பின்னர் அங்கிருந்து நள்ளிரவில் புறப்பட்டு அதிகாலை சென்னை சென்று சென்றடைகிறது. அசல் ஆவணங்களை வைத்துள்ளனர். இதே பதிவு எண்ணுடன் மற்றொரு பஸ் நள்ளிரவில் திருச்சியிலிருந்து புறப்பட்டு கோவை செல்கிறது. 
இதையடுத்து  அந்த பஸ்ஸின் ‘சேஸ்’ நம்பரை சரி பார்த்தபோது போலி எண்ணுடன் இயங்கி வந்தது தெரியவந்தது. மேலும் அருணாச்சல பிரதேச எண்ணுடன் வந்த பஸ்சை தடுத்து நிறுத்திய போது அந்த பஸ் நிற்காமல் சென்றது. இதனால் போலீசாரின் உதவியுடன் அந்த பஸ்சை துரத்திச்சென்று பிடித்து விசாரித்த போது முறையான ஆவணங்கள் ஏதும் இல்லாமல் பஸ் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்