கிடுகிடு விலை உயர்வால் எட்டாக்கனியாகி வரும் எலுமிச்சம்பழம்

கிடுகிடு விலை உயர்வால் எட்டாக்கனியாகி வரும் எலுமிச்சம்பழம்

Update: 2022-04-05 16:53 GMT
திருப்பூர்,
திருப்பூரில் கடந்த சில வாரங்களாகவே கடுமையான வெயில் இருந்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்கள் இளநீர், மோர், பழரசம், பதநீர், நுங்கு, தர்பூசணி போன்றவைகளை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் எலுமிச்சம்பழத்தையும் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். திருப்பூருக்கு பழனி, புளியம்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து எலுமிச்சம்பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் வெயில் அதிகமாக இருப்பதால் எலுமிச்சம்பழ விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் தற்போது திருப்பூருக்கு குறைவான அளவிலேயே எலுமிச்சம்பழம் வருகிறது. இதன்காரணமாக இதன் விலை அதிகரித்துள்ளது. திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூ.80-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இதன் விலை ரூ.130-ஆக அதிகரித்தது. இந்த நிலையில் தற்போது கிலோ ரூ.200- ஆக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக எண்ணிக்கை அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வந்த எலுமிச்சம் பழம் தற்போது எடை அளவில் விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலான கடைகளில் ஒரு பழமாக இருந்தாலும் கூட அதை எடை போட்டு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பழங்களின் விலை அதன் அளவிற்கு தகுந்தவாறு உள்ளது. ஒரு பழம் ரூ.10 முதல் ரூ.15 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் ஒரு பழத்தின் குறைந்த பட்ச விலை ரூ.3 ஆக இருந்த நிலையில் தற்போது ராக்கெட் வேகத்தில் விலை உயர்ந்து இருப்பதால் பலருக்கும் எலுமிச்சம்பழம் எட்டாக்கனியாக மாறியுள்ளது என்றே சொல்லலாம். இன்னும் வெயில் அதிகரிக்கும் போது எலுமிச்சம் பழத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் செய்திகள்