பஸ்சுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் மீது கார்மோதி ஒருவர் பலி

குடியாத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-04-05 16:22 GMT
குடியாத்தம்

குடியாத்தம் அருகே பஸ்சுக்காக காத்திருந்த தொழிலாளர்கள் மீது கார் மோதியதில் ஒருவர் இறந்தார். பிணத்துடன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கார்மோதி தொழிலாளி பலி

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ராமாலை புதுமனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு (வயது 42) திருமணமாகாதவர். இதே கிராமத்தை சேர்ந்தவர்கள் கஜேந்திரன் (60), வினோத்குமார் (34). 

இவர்கள் 3 பேரும் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்கள். இன்று காலையில் ராமாலை பஸ்நிறுத்தம் அருகே 3 பேரும் வேலைக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது திருப்பதியில் இருந்து குடியாத்தம் நோக்கி ஒரு கார் வந்தது.

இந்்த கார் திடீரென தாறுமாறாக ஓடி பஸ்சுக்காக காத்திருந்த பாபு உள்ளிட்டோர் மீது மோதியது. இதில் பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். 

கஜேந்திரன் மற்றும் வினோத்குமார் ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் கஜேந்திரனையும், வினோத் குமாரையும் மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணத்துடன் மறியல்

இவர்கள் மீது மோதிய கார் நிற்காமல் சென்றது. ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்றதும் அங்குள்ள ஒரு நிலத்தில் காரை நிறுத்திவிட்டு அதில் இருந்தவர்கள் தப்பிச்சென்று விட்டனர். 

விபத்தில் பாபு இறந்த தகவல் அறிந்ததும் அவரது கிராமத்தை சேர்ந்தவர்களும், உறவினர்களும் விரைந்து வந்து அவரது உடலை பார்த்து கதறி அழுதனர். 

பின்னர் விபத்துகளை தடுக்கும் வகையில் அந்தப்பகுதியில் வேகத்தடைகள் அமைக்க வேண்டும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டுமென வலியுறுத்தி, பாபுவின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

 இதனால் குடியாத்தம் வழியாக ஆந்திரா செல்லும் வாகனங்களும் ஆந்திராவில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்த வாகனங்களும் செல்லமுடியாமல் நீண்ட தூரம் நின்றன. 

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, மற்றும் பரதராமி போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்களிடம் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது.

டிரைவர் கைது

தொடர்ந்து பாபுவின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விபத்து ஏற்படுத்திய காரை போலீசார் கைப்பற்றினர். மேலும் விசாரணை நடத்தியதில் குடியாத்தம் நடுப்பேட்டை அஞ்சுமான் பகுதியைச் சேர்ந்த சரவணன் (55) என்பவர் குடும்பத்துடன் காரில் திருப்பதிக்கு சென்றுவிட்டு திரும்பி வரும் போது விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது. 

மேலும் காரை நிறுத்தி விட்டு காரை ஓட்டிவந்த சரவணன் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை பரதராமி போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்