மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திட்டச்சேரி அருகே மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி அருகே மழை மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தீமிதி திருவிழா
திட்டச்சேரி அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் மழை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 1-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் செய்யப்பட்டு வந்தது.
தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் திரளான பக்தர்கள் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பரம்பரை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.