பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு மீது தாக்குதல்
போடி அருகே பெண் சப்-இன்ஸ்பெக்டர் வீடு மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
போடி:
போடி அருகே உள்ள சிலமலை கிராமத்தை சேர்ந்தவர் பாண்டிசெல்வி (வயது 30). இவர் தேவாரம் போலீஸ்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 3-ந்தேதி பாண்டிசெல்வி வேலைக்கு சென்று விட்டார். அன்று இரவு அவருடைய வீட்டுக்கு 2 மர்ம நபர்கள் வந்தனர்.
வீட்டு முன்பு இருந்த கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் வீட்டுக்குள் புகுந்து பாண்டிசெல்வியின் பெற்றோரிடம், உனது மகள் தேவையில்லாமல் எங்கள் விஷயத்தில் தலையிடுவதாக கூறி, கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாண்டிசெல்வியின் தாய் பஞ்சவர்ணம் போடி தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து 2 மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.