முஸ்லிம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்க கூடாது என கூறுவது தேசத்துரோகம்-குமாரசாமி

முஸ்லிம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்க கூடாது என கூறுவது தேசத்துரோகம் என்று குமாரசாமி காட்டமாக கூறினார்

Update: 2022-04-05 16:16 GMT
பெங்களூரு: முஸ்லிம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்க கூடாது என கூறுவது தேசத்துரோகம் என்று குமாரசாமி காட்டமாக கூறினார்.
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மக்கள் திரும்புவார்கள்

முஸ்லிம் வியாபாரிகளிடம் மாம்பழம் வாங்க வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள். இதை விட தேசத்துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. இதே நிலை நீடித்தால் பா.ஜனதாவுக்கு எதிராக மக்கள் திரும்புவார்கள். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு நிச்சயம் இருக்கிறது. முஸ்லிம்கள் ரசாயன பவுடர் கொண்டு மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

கடந்த பல ஆண்டுகளாக அவர்களிடம் தான் மாம்பழங்களை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளோம். இத்தகைய விஷயங்கள் தேர்தல் வரும்போது எழுப்புவது ஏன்?. ஓட்டுகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் இவ்வாறு பிரச்சினை கிளப்புகிறார்கள். ஒரு முறை எங்கள் கட்சிக்கு வாய்ப்பு தாருங்கள். மாநிலத்தில் நிலுவையில் உள்ள அனைத்து நீர்ப்பாசன திட்டங்களையும் நிறைவேற்றுவோம்.

ஓய்வுபெற திட்டமிட்டேன்

எங்கள் குடும்பத்தினர் மட்டுமே ஆட்சி செய்ய வேண்டும் என்று இல்லை. இந்த மாநிலமே எங்கள் குடும்பம் தான். பிரதமர் பதவியையே தியாகம் செய்தவர் எங்கள் தந்தை. நான் அரசியலில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டேன். ஆனால் மக்களின் கடினமான நிலையை கண்டு அரசியலில் நீடிக்கிறேன். விவசாய சங்கங்கள் நேரடி அரசியலுக்கு வர வேண்டும்.

உணர்வு பூர்வமான விஷயங்களை முன்வைத்து நாங்கள்(ஜனதா தளம்(எஸ்) கட்சியினர்) போராட மாட்டோம். நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் அடிப்படையில் அரசியல் செய்கிறோம். பா.ஜனதா தினமும் ஒரு உணர்வு பூர்வமான பிரச்சினையை முன்வைத்து மக்களை பிரிக்கிறது. இதே நிலை நீடித்தால் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கை நிலை தான் இந்தியாவுக்கும் வரும். நான் முதல்-மந்திரியாக இருந்தபோது எப்போதும் மதக்கலவரம் நடக்கவில்லை.
இவ்வாறு குமாரசாமி கூறினார்.

மேலும் செய்திகள்