பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிதம்பரம், திட்டக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்
சிதம்பரம்
சிதம்பரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர், விலை உயர்வை கண்டித்து சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நகர குழு உறுப்பினர் சங்கமேஸ்வரன் தலைமை தாங்கினார். நகராட்சி துணைத் தலைவர் முத்துக்குமரன் முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பாபு வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். இதில் நகர செயலாளர் ராஜா, மூத்த நிர்வாகி மூசா, மாவட்டக்குழு சித்ரா, நகர குழு அமுதா, கவுன்சிலர் தஸ்லீமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நெய்வேலி
நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நெய்வேலி மெயின் பஜார் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கட்சியின் நெய்வேலி செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு அரசு முன்னிலை வகித்தார். மாநில குழு உறுப்பினர் வேல்முருகன் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஜெயராமன், சீனிவாசன், மேரி ஆகியோர் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் மற்றும் டோல்கேட் கட்டண உயர்வை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் நெய்வேலி நகர கமிட்டி உறுப்பினர்கள் அமிர்தலிங்கம், முருகன், குமார் பழனிவேல், சாமுவேல், புண்ணியமூர்த்தி மற்றும் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் அன்பழகன் நன்றி கூறினார்.
திட்டக்குடி
அதேபோல் திட்டக்குடி பஸ் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு ராஜேந்திரன், திட்டக்குடி நகரசெயலர் வரதன், நிர்வாகிகள் மகாலிங்கம், பாலகிருஷ்ணன், அரவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் அசோகன் கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், அத்தியாவசிய மருந்துகளின் விலை உயர்வைக்கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
பரங்கிப்பேட்டை
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து கடைவீதியில் கிள்ளை நகர செயலாளர் திருஞானம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய குழு உறுப்பினர் சுதாகர், மாவட்ட குழு உறுப்பினர் வாஞ்சிநாதன், ஒன்றிய செயலாளர் ஆழ்வார், மாவட்ட முன்னாள் குழு உறுப்பினர் கற்பனை செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் நாகூர் ராஜா, முரளி, வாலிபர் சங்க நிர்வாகிகள் சிவராஜ், விஷ்ணு பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நிர்வாகி கோவிந்தராஜ் நன்றி கூறினார்.
ஸ்ரீமுஷ்ணம்
ஸ்ரீமுஷ்ணம் காமராஜர் சிலை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பாண்டுரங்கன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரகாஷ் கோரிக்கைகள் குறித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை குறைக்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக கியாஸ் சிலிண்டர், மோட்டார் சைக்கிளுக்கு மாலை அணிவித்து இருந்தனர். இதில், பாலு, பெருமாள், சுரேஷ், கலியமூர்த்தி, சேட்டு, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.