சமூக விரோத சக்திகளின் செயலை முதல்-மந்திரி ஆதரிக்கிறாரா?-சித்தராமையா கேள்வி
சமூக விரோத சக்திகளின் செயலை முதல்-மந்திரி ஆதரிக்கிறாரா? என்று சித்தராமையா கேள்வி எழுப்பி உள்ளார்;
பெங்களூரு: கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மத நல்லிணக்கம் பாழானாலும் அதுபற்றி கவலைப்படாமல் உள்ளார். அவர் பலவீனமாகவும் உள்ளார். கோவில்கள், மசூதிகள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் நீண்ட காலத்திற்கு முன்பே ஒலிப்பெருக்கிகள் பொருத்தப்பட்டன.
இதுவரை அவை மக்களுக்கு என்ன பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதா?.
சமுதாயத்தில் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் நபர்கள் மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. சில வலதுசாரி அமைப்புகள் மற்றும் பா.ஜனதா தலைவர்கள், மசூதிகளில் வைக்கப்பட்டுள்ள ஒலிப்பெருக்கிகளை அகற்றும்படி வலியுறுத்தியுள்ளனர். அது மக்களின் அமைதிக்கு இடையூறு ஏற்படுத்துவதாக அவர்கள் சொல்கிறார்கள். கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்குவதால் மாநிலத்தில் மத பிரச்சினைகளை எழுப்பி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட பா.ஜனதா முயற்சி செய்கிறது. ஆனால் இது அந்த கட்சியை திருப்பி தாக்கும். கர்நாடகத்தில் சமூக விரோத சக்திகள், பொதுமக்கள் அமைதிக்கு தொந்தரவு ஏற்படுத்தி அதன் மூலம் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்கின்றன. இந்த விஷயத்தில் முதல்-மந்திரி மவுனம் காப்பதன் மூலம் அந்த சக்திகளின் செயலை ஆதரிக்கிறாரா? அல்லது அவரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இவ்வாறு சித்தராமையா கூறினார்.