மறுமுத்திரை இடாமல் பயன்படுத்திய 30 மின்னணு தராசுகள் பறிமுதல்

போளூரில் மறுமுத்திரை இடாமல் பயன்படுத்திய 30 மின்னணு தராசுகள் பறிமுதல்

Update: 2022-04-05 16:07 GMT
போளூர்

போளூரில் வணிகர்கள் தங்கள் நிறுவனங்கள், கடைகளில் பயன்படுத்திவரும் மின்னணு தராசுகள், மேஜை தராசுகள், எடைக்கற்கள், சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்தி வருவதாக புகார்கள் வந்தன.

இதையடுத்து தொழிலாளர் ஆணையர் அதுல்ஆனந்த், திருவண்ணாமலை கலெக்டர் முருகேஷ் ஆகியோர் உத்தரவின் பேரில், திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி தலைமையில் அதிகாரிகள் இன்று போளூரில் திடீர் ஆய்வு  மேற்கொண்டனர். 

அப்போது போளூர் மார்க்கெட் பகுதியில்  முத்திரையிடாமல் பயன்படுத்தி வந்த 30 மின்னணு தராசுகள், ஒரு அளவை, ஒரு மேஜை தராசு மற்றும் 3 எடை கற்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மீனாட்சி கூறுைகயில்,  வணிகர்கள் சட்ட விதிமுறைப்படி ஒவ்வொரு ஆண்டும் தங்கள் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் எடை அளவுகளில் உரிய காலத்திற்குள் மறு முத்திரையிட்டு மறுபரிசீலனை சான்றுகளை பெற்று பயன்படுத்த வேண்டும். 

உரிய காலத்தில் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்துபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த ஆய்வு மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றார்.

ஆய்வின்போது தொழிலாளர் துணை ஆய்வாளர் மனோகரன், தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் சுபாஷ் சந்தர், ஆத்திபழம், சாந்தினி, முத்திரை ஆய்வாளர்கள் சிவக்குமார், மோதிலால் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்