கிரிக்கெட் சூதாட்டத்தில் தோற்ற வாலிபரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த வியாபாரி படுகொலை
சிக்கமகளூரு டவுனில், கிரிக்கெட் சூதாட்டத்தில் தோற்ற வாலிபரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கூட்டாளிகளுடன் தலைமறைவாக உள்ள அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்
சிக்கமகளூரு: சிக்கமகளூரு டவுனில், கிரிக்கெட் சூதாட்டத்தில் தோற்ற வாலிபரிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்த வியாபாரி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கூட்டாளிகளுடன் தலைமறைவாக உள்ள அந்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
கிரிக்கெட் சூதாட்டம்
சிக்கமகளூரு (மாவட்டம்) டவுன் கவுடனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் துருவராஜ் அர்ஸ்(வயது 23). வியாபாரியான இவர் கடந்த ஒரு வாரமாக கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்துள்ளார். இவரது சூதாட்டத்தில் ஒசதாரை கிராமத்தைச் சேர்ந்த பிரமோத் என்கிற பிரதீப்(24) என்பவரும் இணைந்து விளையாடி இருக்கிறார்.
ஆனால் சூதாட்டத்தில் தோல்வி அடைந்த பிரதீப், தான் செலுத்த வேண்டிய பணத்தை துருவராஜிடம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதுபற்றி துருவராஜ், பிரதீப்பிடம் கேட்டு உடனடியாக பணத்தை தருமாறு தொல்லை கொடுத்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவு பணம் கொடுப்பதாக கூறி துருவராஜை சிக்கமகளூரு டவுன் கோட்டை பகுதிக்கு பிரதீப் அழைத்தார். அதன்படி துருவராஜ் கோட்டை பகுதிக்கு சென்றார்.
வலைவீச்சு
அப்போது அங்கு மறைந்திருந்த பிரதீப், தனது கூட்டாளிகள் சிலருடன் சேர்ந்து அரிவாளால் துருவராஜை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தார். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த கொலை சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுபற்றி சிக்கமகளூரு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து துருவராஜின் உடலை கைப்பற்றினர்.
பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பிரதீப் மற்றும் அவரது கூட்டாளிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.