தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து
பெரியகுளம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே முருகமலை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தென்னை நார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்த தென்னை நார்களில் நேற்று இரவு திடீரென்று தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் தீ மளமளவென தென்னை நார் குவியலில் பரவியது. இதனால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த விபத்து குறித்து அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் நிலைய அலுவலர் பழனிச்சாமி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், தேனி, ஆண்டிப்பட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு ஆகிய ஊர்களில் இருந்து கூடுதலாக தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது.
சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். தகவலறிந்த பெரியகுளம் போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துக்குமார், மாவட்ட தீயணைப்பு அலுவலர் கல்யாணகுமார், மாவட்ட உதவி அலுவலர் குமரேசன் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். இந்த தீ விபத்தில் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான தென்னை நார்கள் தீயில் எரிந்து நாசமாகி இருக்கலாம் என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்து எப்படி? ஏற்பட்டது என்பது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 30-ந்தேதி இதே தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.