இந்தியாவை சுயமரியாதை மிக்க நாடாக மாற்றியவர், பாபு ஜெகஜீவன்ராம்
இந்தியாவை சுயமரியாதை மிக்க நாடாக மாற்றியவர், பாபு ஜெகஜீவன்ராம்- பசவராஜ் பொம்மை புகழாரம்
பெங்களூரு:
முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராமின் பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன் பிறகு அவர் பேசியதாவது:-
பீகார் மாநிலத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அதிகளவில் அவமானங்களை சந்தித்து வளர்ந்து நாட்டின் துணை பிரதமராக உயர்ந்தவர் பாபு ஜெகஜீவன்ராம். பல்வேறு வலிகளை அனுபவித்த போதும், துணை பிரதமராக இருந்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபட்டார். அடித்தளத்தில் இருந்த தலித் மக்களின் மேம்பாட்டிற்காக அவர் குரல் கொடுத்தார்.
தலித் மக்களின் சுயமரியாதையின் அடையாளமாக அவர் திகழ்கிறார். அவர் விவசாயத்துறை மந்திரியாக இருந்தபோது பசுமை புரட்சி ஏற்பட்டது. இதன் மூலம் இந்தியாவை சுயமரியாதை மிக்க நாடாக மாற்றினார். உணவு தானிய உற்பத்தியில் நமது நாடு தன்னிறைவு அடைந்துவிட்டது. ராணுவ மந்திரியாக பொறுப்பேற்று நாட்டின் பாதுகாப்புக்காக பாடுபட்டார். அவர் கர்நாடகத்திலும் புகழ் பெற்றார். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.