வாலிபரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் மோசடி
பரிசு பொருட்கள் அனுப்புவதாக கூறி வாலிபரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விக்கிரவாண்டி தாலுகா கலித்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது 22). இவரிடம் முகநூல் மூலம் நண்பராக பழகிய ஒருவர், தனது செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் மூலம் பிரவீன்குமாருக்கு பரிசு பொருட்கள் அனுப்பியுள்ளதாக தகவலை பதிவு செய்துள்ளார்.
பின்னர் 14.1.2022 அன்று வெவ்வேறு செல்போன் எண்களில் இருந்து பிரவீன்குமாரை தொடர்பு கொண்டு பேசிய நபர், தான் கூரியர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறி பரிசு பொருட்களை பெற கூரியர் கட்டணம், டெலிவரி கட்டணம் என்று கூறி பணம் அனுப்பி வைக்குமாறு கூறினார். இதை நம்பிய பிரவீன்குமார், அந்த நபர் கூறிய 2 வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தம் 2 லட்சத்து 93 ஆயிரத்து 500- ரூபாய் அனுப்பினார். ஆனால் பணத்தை பெற்ற அந்த நபர், பிரவீன்குமாருக்கு எந்தவொரு பரிசு பொருட்களையும் அனுப்பாமல் பணத்தை ஏமாற்றி மோசடி செய்து விட்டார்.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்து பிரவீன்குமார், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பூங்கோதை, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.